தென்காசி, சூலை 3-
ராஜபாளையத்தில் இருந்து புளியரை வரை நான்கு வழிச்சாலை அமைப்பதை விவசாய நன்செய் நிலங்களை கையகப்படுத்தாமல் மாற்று வழியில் சாலை அமைக்க முதல்வரை சந்தித்து வலியுறுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.


திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் நிலங்கள் பெரும்பாலும் நன்செய் நிலமாக இருப்பதால் மாற்று வழியில் நான்கு வழிச்சாலையை அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக தேசிய நெடுஞ்சாலை நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றியமைப்பு சங்கம் அமைக்கப்பட்டு போராடி வருகின்றனர்.


இந்நிலையில் நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றியமைப்பு  சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வாசுதேவநல்லூர் ஜாஸ்பர் வணிக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கோ.மாடசாமி தலைமை வகித்தார். பொருளாளர் க.பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். செயலாளர் மு.சரவணக்குமார் வரவேற்று பேசினார்.


கூட்டத்தில் சாலை அமைக்கப்படும் இடத்தை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தர்ராஜ் மற்றும் நான்கு வழிச்சாலை திட்ட அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இவர்கள் பழைய வழித்தடத்தையே ஆய்வு செய்துள்ளனர். விரைந்து புதிய மாற்று வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்றும், இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி (தூத்துக்குடி),  தனுஷ் எம்.குமார் (தென்காசி), வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே