தென்காசி,  செப்.16-

கடையநல்லூர் அருகே, சாலையை வழிமறித்து காட்டு யானைகள் நின்றன. இதை பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை, அச்சன்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகள் இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி விடுகின்றன. 

வயல்களில் உணவு உட்கொண்ட பின் அதிகாலையில் காட்டுக்குள் சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இவ்வாறு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 காட்டு யானைகள் ஊருக்கு அருகே முகாமிட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த யானைகள் காட்டுப்பகுதிக்குள் விரட்டி விடப்பட்டன.

அடவிநயினார் அணைக்கட்டுக்கு செல்லும் மேட்டுக்கால் சாலையை மறித்தபடி 4 காட்டு யானைகள் நிற்பதை அந்த வழியாக சென்ற விவசாயிகள் பார்த்தனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய சாலை இதுவாகும். அந்த வழியாக யாரும் செல்ல முடியாதபடி ஊருக்கு அருகே யானைகள் கூட்டமாக நின்றதால் விவசாயிகள் திடுக்கிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள் திரண்டனர்.

பின்னர் அவர்கள் யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால், விரட்ட முயன்றவர்களை யானைகள் துரத்தின. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர்.

அதன் பின்னர் இதுகுறித்து கடையநல்லூர் வனச்சரகர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வனவர் அம்பலவாணன் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு வெடி வெடித்தும், சைரன் ஒலி எழுப்பியும் போலீசார் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/