நெல்லை, டிச.23:
நெல்லையில் 101 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 41.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமை தாங்கினார்.
அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் வரவேற்று பேசினார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 101 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 77 ஆயிரத்து 589 மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் மற்றும் நிவாரணத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அப்போது ராதாபுரத்தில் நடத்தப்பட்ட முகாமில் ஒரே நாளில் 1,453 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்போது மத்திய மந்திரியாக இருந்த நெப்போலியன் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமை நாடு முழுவதும் செயல்படுத்தினார். தற்போது தமிழகத்தில் சாமானியர்கள் பயன்பெறக்கூடிய ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தாமிரபரணி ஆற்றின் தொன்மையையும், வரலாற்று சிறப்பையும், பழங்கால நாகரீகத்தையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மொழியின் பெருமையையும், நெல்லை மாவட்டத்தின் பெருமையையும் பிஷப் கால்டுவெல் ஆராய்ச்சி செய்து புத்தகம் வெளியிட்டார்.
இதேபோன்று தற்போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாவட்ட மக்களின் தொழில்களின் பெருமைகளையும், பனை மரத்தின் பயன்களையும், தாமிரபரணியின் பெருமைகளையும், நமது நாகரீகம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய தொன்மையானது என்பதை விளக்கும் வகையில் ஆய்வு செய்து அரசுக்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கால்டுவெல் ஆங்கிலத்தில் எழுதிய ‘திருநெல்வேலி சரித்திரம்’ புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் நன்றி கூறினார். https://www.disabilityaffairs.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today