தென்காசி, டிச. 15:

தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் வீராணம் மெயின் ரோட்டின் அருகில் உள்ள தெருக்களில், சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் இன்னும் வடியாததால் இப்பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. 

இதனை சரிசெய்து சாலை வசதி அமைக்கக் கோரி வீரகேரளம்புதூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தொடர்ந்து தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே சேறும் சகதியுமான தெருவை உடனடியாக சீர்செய்து சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் வீராணம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வீரகேரளம்புதூர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்துடன் பேசி விரைவில் தெருவை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். 
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். https://www.tnrd.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today