தென்காசி , நவ. 26:
வாசுதேவநல்லூர் அஞ்சலகத்தில் நடைபெற்ற செல்வமகள் சேமிப்பு கணக்கு துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார் கலந்து கொண்டார். கோவில்பட்டி அஞ்சல் கோட்டம் சார்பில் பெண் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உதவும் செல்வ மகள் சேமிப்புக் கணக்குகளை அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் இலவசமாக தொடங்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைகுமார் பொருளாதாரத்தில் நலிவுற்ற 400 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்குகளை துவங்க முதல் தவணை தொகையாக தம் சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் – நிதியுதவி வழங்கி கணக்குகள் துவங்க உதவி புரிந்துள்ளார்.
அப்பெண் குழந்தைகளுக்கு பாஸ் புத்தகம் வழங்கும் விழா வாசுதேவநல்லூரில் உள்ள திருவள்ளுவர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் தலைமை வகித்தார்.
விழாவில் வாசு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி செல்வ மகள்களுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்கு பாஸ் புத்தகங்களை வழங்கினார். விழாவில் உதவி கோட்டக் கண்காணிப்பாளர் வசந்தா சிந்து தேவி, சங்கரன்கோவில் அஞ்சல் உபகோட்ட ஆய்வாளர் கார்த்திகை பாண்டியன், கோவில்பட்டி கோட்ட புகார் ஆய்வாளர் கேத்திரபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.indiapost.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today