தென்காசி, நவ.5:

தென்காசி மாவட்டம், கடையத்தில் தமிழக முதல்வர்; ஆணைக்கிணங்க இராமநதி நீர்த் தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தலைமையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞான திரவியம் தண்ணீர் திறந்து வைத்தார்;

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழக முதல்வர் ஆணையின்படி, தென்காசி மாவட்டம், இராமநதி பாசன திட்டத்தின் கீழுள்ள வடகால், தென்கால் பாப்பான்கால், இராமநிதி புதுக்கால், ஆகிய கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் 4943.51 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு 1431-ம் பசலி பிசான பருவ சாகுபடிக்கு இராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து 03.11.2021 முதல் 03.03.2022 வரை 148 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் மொத்தம் 823.91 மி.க.அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர் வரும் நாட்களில் பருவ மழை பெய்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லையென்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சிமுறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், இடைகால்,  பொட்டல்புதூர், துப்பாக்குடி, அயன் பொட்டல்புதூர், பாப்பான்குளம் மற்றும்  இரவணசமுத்திரம்  ஆகிய பயன்பெறும் 11 கிராமங்களில் உள்ள விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் விநியோகப் பணியில் பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தண்ணீர் திறந்த நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, தெற்கு மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதய கிருஷ்ணன். ஆலங்குளம் ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன், கடையம் ஒன்றிய குழு துணைத் தலைவர் மகேஷ் மாயவன், உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) திரு.ச.சங்கர் ராஜ், உதவி பொறியாளர்கள் ரா.முருகேசன், து.ஆனந்த், கிருஷ்ணமூர்த்தி, ரா.அந்தோணிராஜ், பேட்டர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in,

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today