தென்காசி,  சூலை 20:


இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகத்தை 8 கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தென்காசி மாவட்ட  ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாத நிலையில், அங்குள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர்.


புளியங்குடி, மேல புளியங்குடி, புன்னையாபுரம், அரியநாயகி புரம், அருணாசலபுரம், அச்சம்பட்டி, ஆண்டாள்குளம், அய்யாபுரம் ஆகிய 8 கிராம மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கரு.வீரபாண்டியன் தலைமையில்  தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது அவர்கள் கூறுகையில், ‘தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு வழங்கியுள்ளோம். இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு ஆதி திராவிட நலத்துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு சர்வே எண்ணும் கொடுக்கப்பட்டது. 


ஆனால் இதுவரையிலும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட வில்லை. எனவே புதிதாக அளவீடு செய்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.


பின்னர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் மனு வழங்க அனுமதிக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். 
உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மனு வழங்கி விட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today