தென்காசி,  டிச.8:

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், படைவீரர் கொடிநாள் அனுசரிப்பதை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா  கொடி நாள் வசூலை துவக்கி வைத்து, கொடி நாள் வசூலில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

முப்படையையும் சார்ந்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கும், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளங்களிலிருந்து மக்களை காப்பதிலும், உள்நாட்டு கலவரத்தின் போது அமைதியை ஏற்படுத்துவதிலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலிலிருந்து மக்களை காப்பதிலும், ஆற்றிவரும் அருஞ்சேவையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் டிசம்பர் 7ம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.

இக்கொடி நாளின் போது திரட்டப்படும் நிதியானது போரில் ஊனமுற்ற படைவீரர்கள், போரில் உயிர் நீத்த படைவீரர்களின் கைம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காகவும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையரின் நலனுக்காகவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் சுமார் 4000 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவையர்கள் வசித்து வருகின்றனர்.  2020-ம் ஆண்டு கொடிநாள் வசூலில் அரசு ரூ.25,52,000  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் மாவட்ட அலுவலர்கள் முயற்சியினால் ரூ.26 லட்சம் வசூல் செய்து அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் 2021-ம் ஆண்டில் இம்மாவட்டத்தைச் சார்ந்த 503 நபர்களுக்கு ரூ.1.33 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில், திருமண மானிய உதவித்தொகையாக 2 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினையும், கல்வி உதவித்தொகையாக 6 நபர்களுக்கு ரூ. 25 ஆயிரம் காசோலையினையும், ஆக மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பில்  நலத்திட்ட உதவிகளை, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா  வழங்கினார்.  
கொடிநாள் வசூலில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ந.முருகன், லெப்.கர்னல்.செல்வநாயகம் சம்சு(ஒய்வு), படைவீரர் நலன் கூடுதல் இயக்குநர் (ஒய்வு) கேப்டன் காந்தி மோகன் பாரதி, நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். https://www.indianarmy.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today