தென்காசி, ஆக. 30-

திருவேங்கடம் அருகே பைக் மீது வேன் மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு பொறியாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி பஞ்சாயத்து பிள்ளையார்குளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 24). டிப்ளமோ பொறியாளரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்த கார்த்திகேயன் சொந்தமாக 2 லாரிகளை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் செங்கல் வியாபாரமும் செய்து வந்தார். திருவேங்கடம் அருகே காரிசாத்தான் பஞ்சாயத்து அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் காளிராஜ் (21). டிப்ளமோ பொறியாளரான இவர் கார்த்திகேயனின் லாரியை ஓட்டி வந்தார். இவரும் கார்த்திகேயனும் அண்ணன்-தம்பி உறவுமுறை ஆவர்.

சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூரில் நடந்த உறவினரின் இல்ல விழாவில் கார்த்திகேயனும், காளிராஜும் நேற்று பங்கேற்றனர். பின்னர் மாலையில் அங்கிருந்து அவர்கள் 2 பேரும் பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருவேங்கடம் அருகே சத்திரகொண்டான் விலக்கு சாலையோர வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த வேன் திடீரென பைக் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் காளிராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த காளிராஜுக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.


இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான புளியங்குடி சிந்தாமணியைச் சேர்ந்த செல்வகுமாரை (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today