தென்காசி, ஆக. 9:
தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிலுக்கு 35 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனத்திட்டத்தின் கீழ் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்கள் மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் அரசு மானியமாக வழங்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏற்கனவே எலுமிச்சை ஊறுகாய் உள்ளிட்ட பிற உணவு பதப்படுத்தும் சிறு தொழில் முனைவோர் மற்றும் எலுமிச்சையில் மட்டும் புதிய சிறுதொழில் முனைவோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். தனி நபராகவோ, மகளிர் சுய உதவிகக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பதிவுபெற்ற கூட்டமைப்பாக இருக்கலாம். ஏற்கனவே பதப்படுத்தும் தொழில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தும் செலவில் 50 சதவீத தொகை மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் pmfme.mofpi.gov.in என்ற வலைதளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), கதவு எண் 93(10), அண்ணாநகர் 4வது தெரு, குத்துக்கல்வலசை என்ற முகவரிக்கு அல்லது 7010254484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்;.
நிருபர் நெல்லை டுடே