தென்காசி, சூலை 12-
நெல்லை கடற்படை தளத்துக்கு வெற்றிச் சுடர் கொண்டு வரப்பட்டது.
கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை நினைவுகூறும் வகையில் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.
இதையடுத்து புதுடெல்லி தேசிய போர் நினைவு சின்னத்தில் உள்ள தீச்சுடரில் இருந்து 4 வெற்றிச்சுடர்கள் எடுக்கப்பட்டு, போரில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர் வசிக்கும் நகரங்கள் வழியாக நாட்டின் 4 திசைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
அதன்படி தெற்கு திசை நோக்கி புறப்பட்ட வெற்றிச்சுடரானது நேற்று நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளத்தை வந்தடைந்தது.
அங்கு தளபதி கேப்டன் ஆசிஷ் கே.சர்மா மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் சம்பிரதாய முறைப்படி, போர் வெற்றி சுடரை பெற்று கொண்டனர்.
தொடர்ந்து போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அங்கு வருகை தந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
நிருபர் நெல்லை டுடே