தென்காசி, சூலை 20:
தென்காசி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.4,157 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் தெரிவித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தாண்டுக்கான 2021-2022 கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தென்காசி மாவட்டத்திற்கான இந்தாண்டு (2021-2022) ரூ.4157.49 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஒவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கியுடன் இணைந்து 2021-2022-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வடிவமைத்துள்ளது.
இந்த திட்ட அறிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு துறைகளில் கடன் வழங்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ.3409.10 கோடியும், தொழில்துறைக்கு ரூ.259.10 கோடியும், ஏற்றுமதித்துறைக்கு ரூ.18.00 கோடியும், கல்விகடன் வழங்கிட ரூ.89.23 கோடியும், வீட்டுக்கடன்கள் வழங்க ரூ.110.21 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தித்துறைக்கு ரூ.24.50 கோடியும், சமுக உள் கட்டமைப்புத்துறைக்கு ரூ. 10.25 கோடியும், இதர துறைகளுக்கு ரூ.237.10 கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் தெரிவித்தார்.
பின்னர், இந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட இந்தியன் ஒவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் பசுபதி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் நபார்டு வங்கியின் உதவிபொது மேலாளர் சலீமா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணுவர்தன், முன்னோடி வங்கி அலுவலர் கிருஷ்ணன், வணிக மேலாளர் ராஜபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே