தென்காசி, அக்.16:

தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது எனதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதி வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆலங்குளம் அரிசி ஆலை அதிபர்கள் சங்க கட்டிடத்தில் நடந்தது.  கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். 

இந்த கூட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் வைகுண்டராஜா தலைமை தாங்கினார். நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன், நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி மாவட்ட செயலாளர் கணேசன்  வரவேற்றுபேசினார். இதில் வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா  நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி நேரம் என்பதால் அதிகாரிகள் எந்த கடைகளுக்கும் விதிமீறல்கள் என்று கூறி அபராதம் விதிக்கக்கூடாது. பண்டிகை காலங்களில் இரவு நேரகடைகள் செயல்பட அரசு அனுமதி அளிக்க வேண்டும். 

தென்காசி வேகமாக வளர்ந்து வரும் மாவட்டம் என்பதால் நடைபெற்று வரும் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்கவேண்டும். சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய சாலையின் இருபுறங்களிலும் கூடுதல் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவேண்டும்.


இந்த சாலையில் ஆலங்குளம் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வந்த 4 சுங்கச்சாவடிகளை தற்போதைய அரசு அகற்றி இருக்கிறது. கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

அதேபோல் இப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க அரசு அனுமதி வழங்கக்கூடாது. இதுதொடர்பாக முதல்-அமைச்சரிடம் வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படும். 

வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்புக்காக மெழுகு பூசி வரும் ஆப்பிள் போன்ற பழங்களை கடைகளில் வந்து ஆய்வு செய்து பறிமுதல் செய்யாமல் அவை எங்கிருந்து வருகிறதோ அங்கேயே தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குளத்தில் காய்கனிகள் பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஆலங்குளம் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதி என்று உள்ளதால் பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். https://www.tnhighways.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today

ReplyReply allForward