தென்காசி, சூலை 7-
சிவகிரி பகுதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரி, உள்ளார் தளவாய்புரம், வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர ராஜ் ஆய்வு செய்தார்.
உள்ளார் தளவாய்புரத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அதாவது அங்கு பஸ் நிறுத்தத்திற்கு எதிரே உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், எனவே ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என்று கூறினர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர், பிரச்சினைக்குரிய இடத்தை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாசில்தார் ஆனந்துக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் , வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா?, எடை அளவு குறைக்காமல் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மண்டல துணை தாசில்தார் சரவணன், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், ராயகிரி கிராம நிர்வாக அலுவலர்கள் புதியராணி, லோகநாதன், விஸ்வநாதப்பேரி தலையாரி வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிருபர் நெல்லை டுடே