தென்காசி, சூலை 1-
தென்காசி மாவட்டத்தில் தொழில் துவங்குவோருக்கு மானியத்தில் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ( (UYEGP)  என்ற தமிழக அரசின் சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தில் திட்ட மதிப்பீடு ரூ.15.00 இலட்சம் வரையிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், ரூ.5.00 இலட்சம் வரையிலான சேவை சார்ந்த தொழில்கள் மற்றும் ரூ.5.00 இலட்சம் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில்கள் புதியதாக துவங்க 25% தமிழக அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம்.

அதிகபட்சமாக உற்பத்தி பிரிவிற்கு ரூ.2.50 இலட்சமும் சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1.25 இலட்சமும் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடைய, ஆர்வமுடைய படித்த வேலைவாய்ப்பற்ற தொழில் முனைவோர்  www.msmeonline.tn.gov.in/uyegpwww.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.  

முதல் தலை முறை தொழில் முனைவோர்கள் ரூ.10 இலட்சத்திற்கு மேற்பட்ட ரூ.5 கோடி வரையிலான புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில்களை திட்டங்களை 25% மானியத்துடன் வங்கி கடன் பெற்று தொழில் ஆரம்பிக்க ஏதுவாக புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டம்(NEEDS)  என்ற திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு மாவட்ட தொழில் மையம் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  
இத்திட்டத்தில் பயன்பெற பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு அல்லது தொழிற் கல்வி (ஐ.டி.ஐ) ஆகிய ஒன்றில் தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.  இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், தொழில் ஆரம்பிக்க உள்ளோர் தங்களது பங்கு தொகையாக 5 விழுக்காடு மட்டுமே வங்கிக்கு செலுத்த வேண்டும்.  மேலும், 25 விழுக்காடு மான்ய தொகையுடன் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.  தொழில் முனைவோர் குறுந்தொழில்களை புதிதாக தொடங்க ஏதுவாக பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)மாவட்ட தொழில் மையம் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் திட்ட மதிப்பீடு வரையிலான உற்பத்தி தொழில்களும், ரூ.10 இலட்சம் வரையுள்ள சேவைத் தொழில்களும் கடன் பெறத் தகுதியுள்ளனவையாகும்.  திட்ட மதிப்பீடு ரூ.10 இலட்சத்திற்கு மேற்பட்ட உற்பத்தித் தொழில் மற்றும் திட்ட மதிப்பீடு ரூ.5 இலட்சத்திற்கு மேற்பட்ட சேவைத் தொழில் ஆரம்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


 திட்ட மதிப்பீட்டில் 90 முதல் 95  விழுக்காடு வரை வங்கி கடனாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் தொழில் ஆரம்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு 25 விழுக்காடும் சிறப்புப் பிரிவினருக்கு 35 விழுக்காடும் மானியமாக வழங்கப்படும்.  நகர்ப்புறங்களில் தொழில் ஆரம்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு 15 விழுக்காடும் சிறப்புப் பிரிவினருக்கு 25 விழுக்காடும் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்ட இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும். www.kviconline.gov.inwww.pmegp.in  விண்ணப்பத்தில் ஏஜென்சி DIC என்று தேர்வு செய்ய வேண்டும்.

மேற்காணும் திட்டங்களில் இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கங்களுக்கு 8778074528 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் மேற்காணும் திட்டங்களில் விண்ணப்பித்து மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று புதியதாக தொழில் தொடங்கி தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளும்படி தென்காசி மாவட்டஆட்சித் தலைவர் திரு.ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே