தென்காசி,  சூலை 21:

சுரண்டையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்  கோபால சுந்தரராஜ் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பேரூராட்சி  அலுவலகம், மெயின் ரோடு, வாட்டர் டேங்க், கீழச்சுரண்டை மற்றும் 15-வது வார்டு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அதிகாரிகளிடம் குடிநீர் வினியோகம், சுகாதாரம் பேணுதல் மற்றும் டெங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக செய்யவும், டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது நகர தி.மு.க.  செயலாளர் ஜெயபாலன், சுரண்டை பஸ்நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் சுகாதாரம் பேணப்பட வேண்டும் எனவும், கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவும், பெரிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து கூடுதல் குடிநீர் வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் பஸ்நிலையம் மற்றும் சுகாதார வளாகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதன்பேரில் பஸ்நிலையம் மற்றும் சுகாதார வளாகங்களை ஆய்வு செய்த அவர், சுகாதார வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கவும், விளக்குகள் அமைக்கவும் மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தவும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பேரூராட்சி  நிர்வாக அலுவலர் வெங்கடகோபு, இளநிலை பொறியாளர் கோபி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today