நெல்லை,  ஆக.10: 

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் உள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆண்டு நிதி முறைகேடு நடந்ததாக சங்க செயலாளர், ஊழியர் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, அந்த சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த 41 பேருக்கு சொந்தமான ரூ.1 கோடியே 26 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக தெரிய வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள், தங்களுக்கு பணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி அவர்கள்  சேரன்மாதேவி கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட கூட்டுறவு பதிவாளர் முத்துசாமி, இணை பதிவாளர் அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நிதி முைறகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்கள் பணத்தை திரும்ப வழங்கவில்லையெனில், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today