நெல்லை,  செப்.23-

நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்கள் வர நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டேங்கர் லாரி டிரைவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலைய கட்டுமான பணிகள், பாதாள சாக்கடை, கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க டேங்கர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாநகராட்சி பகுதிகளில் வருவதற்கு நேர கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். 

அதன்படி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் அதிகாலை வரையிலும் மாநகருக்குள் கனரக வாகனங்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் வர அனுமதி இல்லை. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நேரக்கட்டுப்பாட்டை கண்டித்து அண்ணா தொழிற்சங்க பெட்ரோலிய லாரி டிரைவர்கள் சங்கத்தினர் செயலாளர் தங்கராஜ் தலைமையில்  தச்சநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலையில் அந்த பகுதியில் ஏராளமான டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.

இதைத்தொடர்ந்து சங்க செயலாளர் தங்கராஜ் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து நேரக்கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் ஆட்சியர்  அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தச்சநல்லூரில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் இருந்து நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் போன்ற எரிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

 கடந்த 2 வாரங்களாக நெல்லை மாநகர எல்லைக்குள் டேங்கர் லாரிகளை இயக்க நேரக்கட்டுப்பாடு என்ற பேரில் அனுமதி மறுக்கப்பட்டு வருவதுடன் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

டீசல், பெட்ரோல், மண்எண்ணெய் போன்றவை அத்தியாவசிய தேவை என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.  தற்போது போலீசார் விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டை பின்பற்றும் நிலை ஏற்பட்டால் 5 மாவட்டங்களுக்கு உரிய நேரத்தில் எரிபொருட்கள் வழங்க இயலாது. 

எனவே பொதுமக்களின் நலன் கருதியும், பாதுகாப்பு கருதியும் நெல்லை மாநகரத்தில் எங்களது டேங்கர் லாரிகளில் லோடு ஏற்றி சென்று வர அனுமதி தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/