தென்காசி, சூலை 26:

குற்றாலத்தில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
குற்றாலம் தனியார் மண்டபத்தில் த.மு.மு.க.வினர் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு மனு வழங்கினர்.
 இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார்  தெரிவித்தனர். இதையடுத்து குற்றாலம் அண்ணா சிலை அருகில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் பரவியது. எனவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 

அப்போது குற்றாலம் ஐந்தருவி சாலையில் இருந்து த.மு.மு.க.வினர் கட்சி கொடிகளுடன் ஊர்வலமாக வந்தனர். அவர்களை தென்காசி துணை காவல் துணைக் கண்காணிப்பாளர்  மணிமாறன், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் தடுத்தனர். 

எனினும் த.மு.மு.க.வினர் ஊர்வலமாக சென்று, அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கட்சி தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், இதற்கு தூண்டுதலாக இருந்ததாக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். துணை தலைவர் கோவை செய்யது முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லை உஸ்மான்கான், மாநில செயலாளர் நயினார் முகமது, தென்காசி மாவட்ட தலைவர் சலீம், செயலாளர் கொலம்பஸ் மீரான், பொருளாளர் செங்கை ஆரிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 162 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதே மண்டபத்தில்தான் கூட்டம் நடத்துவதற்கு போலீசாரிடம் த.மு.மு.க.வினர் அனுமதி கேட்டு இருந்தனர்.
தொடர்ந்து அங்கு த.மு.மு.க.வினர் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today