தென்காசி, சூலை 8-
தென்காசி மாவட்டத்தில் தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில், அதிக முதலீடு செய்யும் நோக்கில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்க்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுயஉதவிக்குழுக்கள்/கூட்டுப் பொறுப்பு குழுக்கள்/மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள்/தனிநபர் தொழில் முனைவோர்/தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதி திராவிடர்/பழங்குடியினர்/மகளிருக்கு 30 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் 42 C, 26 வது குறுக்குத்தெரு, மகாராஜா நகர், திருநெல்வேலி-627011 என்ற அலுவலக முகவரியில் அல்லது 0462 2581488, 9384824280 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.07.2021 ஆகும். தென்காசி மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நிருபர் நெல்லை டுடே