தென்காசி,  நவ.16:

நெல் கொள்முதல் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தால் 20 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகள் சாலையில் தேங்கி கிடக்கின்றன. தொடர் மழையால் நெல் மூட்டைகளில் நெற்பயிர்கள் முளைத்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் வடகரை அருகே உள்ள அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் மேட்டுக்கால் பாசனத்தின் கீழ் கார் பருவ சாகுபடியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அறுவடை பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த பகுதியில் அரசு சார்பில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அறுவடை செய்த நெற்பயிர்களை இவற்றின் மூலம் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் மோட்டை ரகம் ரூ.806 -க்கும், சன்னம் ரகம் ரூ.824-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது. இதனால் சாலை ஓரங்களில் நெற்பயிர்களை விவசாயிகள் குவியல் குவியலாகவும், மூட்டை மூட்டைகளாகவும் அடுக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மூட்டைகளை ஏற்றி செல்வதற்கு வாகன வசதி இல்லாததாலும், நெற்பயிர்களில் அதிகளவு ஈரப்பதம் இருப்பதாலும் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து அறுவடை செய்த நெற்பயிர்களை சாலையில் குவித்து வைத்திருப்பது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேக்கமடைந்த நெல் மூட்டைகளை ‍கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.tnagrisnet.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today