நெல்லை, டிச.24:
பிசான சாகுபடிக்காக களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள வடக்கு பச்சையாறு அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டி நிரம்பி வழிந்தது.
இதையடுத்து பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கி, வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, நாங்குநேரியான் கால்வாய், மடத்து கால்வாய், பச்சையாறு கால்வாய்களில் செல்கிறது.
இதன் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110 குளங்கள் மற்றும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நிகழ்ச்சியின்போது சபாநாயகர் அப்பாவு கூறுகையில், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் சரியாக பங்கீடு செய்து வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அதன்படி நெல் பயிரிட ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வாழை பயிரிட ஏக்கருக்கு ரூ.60 ஆயிரமும் கடன் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் வாங்கி பயனடைய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜ், உதவி பொறியாளர்கள் பாஸ்கர், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tirunelveli.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today