நெல்லை, ஆக. 6:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில்  தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்கள் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க தலைவர் மோகன் தலைமையில் அலுவலக நுழைவு வாசலில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் நேரில் வந்து தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது அவர்கள், நெல்லை மாநகராட்சியில் சுய உதவிக்குழு மூலம் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், அம்மா உணவக தொழிலாளர்கள் என 1,500-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். 

இதில் தூய்மை பணியாளர்களிடம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் பிடித்தம் செய்த பணம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை. இதே நிலைதான் மற்ற பணியாளர்களுக்கும் உள்ளது. 

இதுவரை மொத்தம் ரூ.5 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உடனடியாக வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதை கேட்ட ஆணையாளர் விஷ்ணு சந்திரன், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today