நெல்லை, செப்.26:
ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன்,மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,188 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் முதல் கட்டமாக 6ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் அம்பை, சேரன்மாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஒன்றியங்களில் 621 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 5 ஒன்றியங்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 765 ஆண்கள், 1 லட்சத்து 78 ஆயிரத்து 234 பெண்கள், 43 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
2வது கட்டமாக 9ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களில் 567 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த 4 ஒன்றியங்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 722 ஆண்கள், 1 லட்சத்து 65 ஆயிரத்து 91 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 826 வாக்காளர்கள் உள்ளனர்.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் 182 வாக்குச்சாவடிகள், 2வது கட்ட தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ளது. இங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, வீடியோ பதிவுகள், நுண் தேர்தல் மேற்பார்வையாளர்கள், இணையதள கண்காணிப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
முதல்கட்ட தேர்தலுக்கு 5,035 அலுவலர்களும், 2வது கட்ட தேர்தலுக்கு 4,521 அலுவலர்களும் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 4258 373 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 7402608438 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.
9 ஒன்றியங்களில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் எனப்படும் வாக்குச்சாவடி விவரம் குறித்த சீட்டுகள் வருகிற 29ந்தேதிக்குள் (புதன்கிழமை) வழங்கி முடிக்கப்படும்.
ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அருணாசலம், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ராம்லால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/