தென்காசி, நவ.23:

தென்காசி மாவட்டத்தில் விவசாய பாசன கால்வாய்களை சீரமைக்க தமிழக அரசு பொதுப்பணித்துறை சார்பில் 83 கோடியே 60 லட்சம்  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அந்த பணிகளை தொடங்கவேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை பொறியாளர் பொன்ராஜை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் திமுக மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் தொட்டியான் கால்வாய் மறுசீரமைப்புக்கு தமிழக அரசு ரூபாய் 9.50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

அதேபோல தெற்கு காவலாகுறிச்சி பெரிய குளத்திற்கு வீராணம் குளத்திலிருந்து தனி கால்வாய் அமைப்பதற்கு 14 கோடியே 20 லட்சம் மதிப்பீடு தயார் செய்து கால்வாய் வெட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி சட்டமன்ற தொகுதி இரட்டை குளத்திலிருந்து ஊத்துமலை வரை பாசனம் பெறுகிற வகையில் இரட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றிட 52 கோடியே 40 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

சுரண்டை செண்பகவல்லி கால்வாய் சிமெண்ட் தளம் அமைத்து இரண்டு பகுதிகளிலும் இருந்து கால்வாய்க்குள் வருகிற கழிவு நீரை தனியாக பிரித்து கால்வாய் தண்ணீரில் கலக்காதவாறு திட்ட மதிப்பீடு ரூபாய் 7 .5 கோடிக்கு தயார் செய்யப்பட்டு அந்த பணியும் அரசு ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பணி தொடங்கப்பட இருக்கிறது.

மேற்கண்ட திட்டப்பணிகளை விரைவுபடுத்தி பணியை உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அந்த  கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

அவரது கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பொன்ராஜ் மேற்கண்ட நான்கு திட்டப் பணிகளுக்கும் விரைவில் அரசாணை பிறப்பிக்கப்பட இருக்கிறது என்கிற தகவலை தெரிவித்துள்ளார். மேலும் மேற்கண்ட பணிகளை விரைவில் தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். https://www.cpwd.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today