நெல்லை, நவ.12:

நெல்லை அருகே, 4 வழிச்சாலை மலைப்பகுதியில் ரூ.15 கோடியில் ‘பொருநை’ அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று இடத்தை தேர்வு செய்த பின் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் அகழாய்வு மூலம் கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ரூ.15 கோடியில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கலாமா? என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த நில வரைபடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும்.

தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ரூ.15 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.பொருநை அருங்காட்சியகம் அமையக்கூடிய இடத்தை பார்வையிட்டு உள்ளோம். இந்த இடம் 13 ஏக்கர் பரப்பளவில் மதுரை -கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இந்த இடத்தில் மிகச்சிறப்பான வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அங்கு அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதன்படி கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. 106 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

மேலும் 3 இடங்களில் கிடைத்துள்ள வளையல்கள், பாசிமணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரத்தாலான பொருட்கள், நாணயங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், வெளிநாடுகளுடன் தமிழர்களின் தொடர்புகள் குறித்த பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகிறது. அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் இதை சுற்றுலா தலமாக பயன்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது.

இது நெல்லையின் அடையாளமாக திகழும். தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில், முதல்-அமைச்சரின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. இதன் அருகில் உயரமான பகுதியில், மாநகராட்சி ஸ்மார்ட்
சிட்டி திட்டத்தின் கீழ் ‘வியூ பாயிண்ட்’ அமைக்கப்பட உள்ளது.

இங்குள்ள தொலைநோக்கி மூலம் நெல்லையின் அழகை பார்க்கும் வசதி கிடைக்கும். எனவே இது பொருட்களை மட்டும் வைக்கும் இடமாக இல்லாமல், அனைவரும் வந்து செல்லும் இடமாக அமைக்கப்படும். நிலத்தை கையகப்படுத்தி, திட்ட வடிவம் இறுதி செய்து விரைவில் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். https://www.asichennai.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today