தென்காசி, ஆக. 23:

தென்காசியில் புறநகர் பாதை திட்டத்தினை தொடங்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சரிடம் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வருகை தந்த வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட நீதிமன்றம்,குறைவு முத்திரைக் கட்டண துணை ஆட்சியர் அலுவலகம், கனிமம் மற்றும் சுரங்கம் துணை ஆட்சியர் அலுவலகம், வருவாய் நீதிமன்ற துணை ஆட்சியர் அலுவலகம், பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட மைய நூலக அலுவலகம், மாவட்ட வனத்துறை அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட சமூக நல பணித்திட்ட அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு, சிறுசேமிப்புத் திட்ட அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட தொழில் மைய அலுவலகம், மாவட்ட வருவாய் நீதிமன்றம் இன்னும் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் உடனே தோற்றுவிக்கப்பட வேண்டும்.

திருநெல்வேலி-தென்காசி நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடித்திட வேண்டும். தென்காசி புறநகர் பாதை அமைத்திடும் பணியை உடனே தொடங்கிட வேண்டும். சங்கரன் கோவில் கோட்டாட்சித்தலைவர் அலுவலகத்தில் தலைமை உதவியாளர் பணியிடம் தோற்றுவிக்கப்பட வேண்டும். தென்காசி மாவட்ட கலால் உதவி ஆணையர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நிலையி;ல் ஓர் பணியிடம் தோற்றுவிக்கப்பட வேண்டும். சங்கரன்கோவிலில் புறநகர் பாதை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை மனுவினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் மைதீன் பட்டாணி, திருமலை முருகன், மாவட்ட இணைச் செயலாளர்கள் மாடசாமி, கணேசன், வீ.கே.புதூர் வட்டத் தலைவர் வீரட்டன் ஆகியோர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரனிடம் வழங்கினர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today