தென்காசி, செப். 16-
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒலிபெருக்கி பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடக்கும் அனைத்து ஊரக பகுதிகளுக்கும், அந்த ஊரக உள்ளாட்சி அமைப்பிற்கு அருகில் 5 கி.மீ சுற்றளவு பகுதி வரை மாவட்டத்திற்குள் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடவடிக்கைகள் முடியும் நாளான 16.10.2021 வரை அமலில் இருக்கும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது பொதுக்கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு நிலையான குழல் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த காவல் துறை அலுவலரின் எழுத்து மூலமான முன் அனுமதி பெற வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தேர்தல் காலம் முழுவதும் பிரச்சாரங்களுக்காக எந்த ஒரு வகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிப் பெருக்கிகளை காலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அனைத்து ஒலிப்பெருக்கிகளும், பொது பிரச்சாரத்திற்கு அல்லது பொதுக்கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்பட்டாலும், நடமாடும் வண்டிகளில் அல்லது வேறு வகையில் பயன்படுத்தப்பட்டாலும் காலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
டிரக்குகள், டெம்போக்கள், கார்கள், வாடகைக்கார்கள், வேன்கள், மூன்று சக்கர வண்டிகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் முதலியன உட்பட அனைத்துவகை வரையறுக்கப்படாத நடமாடும் வண்டிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வேறு நபர்கள், ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரிகளிடம் அந்த வாகனங்களின் பதிவு எண்களை / அடையாள எண்களை ஒப்படைக்க வேண்டும்.
மேற்சொன்ன எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகள் உள்ள யாதொரு வாகனம் மற்றும் வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு அப்பாலும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப்பெருக்கிகளும், அதனைப் பயன்படுத்துவதற்கு தொடர்புடைய அனைத்து கருவிகளுடன் பறிமுதல் செய்யப்படும்.
நடமாடும் ஒலிப்பெருக்கிகளை பொறுத்தவரை அவை பொருத்தப்பட்ட வாகனங்களை பதிவு எண்கள்/அடையாள எண்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும், உள்ளுர் காவல்துறை அதிகாரிகளிடமும் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்;.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/