தென்காசி, சூலை 8-

தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான ரூ.520 கோடி மதிப்புள்ள 81 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


தென்காசி மாவட்;டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் ஆழ்வார்குறிச்சி அருள்மிகு வன்னியப்பர் திருக்கோவில், கீழப்பாவூர் அருள்மிகு திருவாலிஸ்வரர் திருக்கோவில், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருக்கோவிலில்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கோபால சுந்தர ராஜ் ஆகியோர் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.


பின்னர்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி முதல் முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற 45 நாட்களுக்குள்ளாக நடைபெற்ற கவர்னர் உரையில் சுமார் ரூ100 கோடி செலவில் திருக்கோவிலில் உள்ள தெப்பங்கள், திருக்கோவில் தேர்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்குக்கு நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கின்ற எந்தெந்த கோவில்கள் 12 ஆண்டுகள் கடந்திருக்கின்றதோ அந்த கோவில்களின் பட்டியல்களை எடுத்து குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் நடத்துவதற்கு முதலமைச்சர் கவர்னர் உரையில் அறிவித்திருந்தார்.


தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் உடனடியாக 12 ஆண்டுகள் கழித்து  குடமுழுக்கு நடைபெறாமல் இருக்கின்றதோ அந்த திருக்கோவில்களில் எல்லாம் குடமுழுக்கு செய்கின்ற பட்டியலை இணைப்பதற்காக ஆய்வு  மேற்கொண்டிருக்கின்றோம்.  அதற்கான திட்ட மதிப்பிட்டினை இந்து சமய அறநிலையத்துறை மண்டல அலுவலத்தின் மூலம் இணை ஆணையாளர்களை  மதிப்பீடு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  எனவே ரூ.100 கோடி அரசு ஒதுக்கீடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு பங்களிப்புகளுடனும் பொதுமக்களும் கோவில் குடமுழுக்குக்கு அரசு காட்டுகின்ற விரைவான நடவடிக்கைகளுக்கு பலர் தங்களுடைய பங்களிப்பை  தமாக முன்வந்து உதவுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  இந்த மாத இறுதியில் எத்தனை திருக்கோவில்கள் குடமுழுக்குக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் நடைபெற இருக்கின்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அதன் முழு விவரத்தையும் தெரிவிப்பார்.

 
அதுபோல, தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து திருக்கோவில்கள், பள்ளிகூடங்கள், கல்லூரிகள் திருக்கோவிலின் சார்பில் நடைபெறுகின்ற அனைத்து மையங்களையும் ஆய்வு செய்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் குற்றாலத்தில் உள்ள ஆதிபராசக்தி  பள்ளி மட்டும்தான் தனியார் கட்டிடத்தில் பள்ளி நடந்துகொண்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. தற்பொழுது இதன்தொடர்பாக ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர், இணை ஆணையர், கல்லூரி முதல்வருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் சார்பில் நிதி பெறுவதற்கு முயற்சி செய்வோம். அடுத்த ஆண்டு இப்பள்ளிக்கு தேவையான கட்டிடத்தை  அரசுக்கு சொந்தமான இடத்திலேயே செயல்படுத்துவதற்கான முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.


மேலும் , திருக்கோவில்களுக்குச் சொந்தமான 81 ஏக்கர்  நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ.520 கோடி ஆகும். இதனை இந்து சமய அறநிலையத்துறையிடம் தன்வசப்படுத்தியுள்ளது. தற்போது சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருவான்குடியில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை தன்வசப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதேபோல் திருக்கோவிலில் போதிய  பணியாளர்கள், அர்ச்சகர்கள், காவலர்கள், மடபள்ளி பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்வதற்கு  முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today