நெல்லை,  நவ 11:

நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களை கண்காணிக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி அபூர்வா கூறினார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா, ஐ.பி.எஸ் அதிகாரி அபின் தினேஷ் மொடக் ஆகியோர் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், நெல்லை போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன் உள்பட வருவாய் துறை, சுகாதார துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகளான டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

பின்னர் சிறப்பு அதிகாரி அபூர்வா நிருபர்களிடம் கூறியதாவது: வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். நெல்லை மாவட்டத்தில் உள்ள சூழல் குறித்து தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். 

நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 அணைகள் மூலம் வடகிழக்கு பருவமழையால் எந்த பாதிப்பும் தற்போது வரை இல்லை. நெல்லை மாவட்டத்தில் நிரம்பும் நிலையில் உள்ள குளங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் குளங்கள் 10 சதவீதம் நிரம்பும் தருவாயில் உள்ளது. பெரும்பாலான குளங்களில் 50 சதவீதம் தண்ணீர் உள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நெல்லை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் சேதம் அடைந்த சாலைகளை, மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி ஆட்சியர்கள்  சந்திரசேகர் (நெல்லை), சுமதி (சேரன்மாதேவி), தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை, சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சிவகுமார், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஹபிபுர் ரகுமான் உள்பட பலர் கலந்துகொண்டனர். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today