தென்காசி, ஆக. 24:

தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூரில் அரசு மருத்துவமனை கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனைக்கான கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்படாமல் இருந்தது. இதனால் அரசு மருத்துவமனை  கட்டுவதற்கான நிதி திரும்ப பெறப்படும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து வீரகேரளம்புதூரில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள இடத்தில் அரசு மருத்துவமனையை உடனே கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர். ஆட்டோ டிரைவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஆட்டோக்கள் ஓடவில்லை.

தொடர்ந்து வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தென்காசி கோட்டாட்சித் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னி வளவன், தாசில்தார் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வீரகேரளம்புதூரில் அரசு மருத்துவமனை விரைவில் கட்ட ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today