தென்காசி,  சூலை 15:

நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகம் என 84 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மேலவீரராகவபுரம் சுகாதார நிலையம், திருக்குறுங்குடி, பத்தமடை, முக்கூடல், உக்கிரன்கோட்டை, வைராவிகுளம், பேட்டை, பெருமாள்புரம், முனைஞ்சிப்பட்டி ஆகிய இடங்களில் மட்டும் கோவேக்சின் தடுப்பூசி போடப்படும். மற்ற இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள தடுப்பூசி போடும் மையத்தில் கோவேக்சின் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். இதில் 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி போட வந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர்.

குறைவான தடுப்பூசிகளே இருந்ததால்  பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 11 மணிக்குள் அனைத்து தடுப்பூசிகளும் காலியாகி விட்டன. இதன்பின்னர் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதற்கிடையே பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கோவேக்சின் தடுப்பூசி போடுவதற்கு வந்த பொதுமக்களுக்கு அந்த தடுப்பூசி போடவில்லை. இதனால் அவர்கள் தங்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபற்றி தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today