நெல்லை, செப்.1- நெல்லை மாவட்டம் பத்மநேரி ஊராட்சியை களக்காடு நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

களக்காடு அருகே உள்ள பத்மநேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
களக்காடு யூனியனுக்கு உட்பட்ட பத்மநேரி ஊராட்சி இயற்கை எழில் சூழ்ந்த வடக்கு பச்சையாறு உள்ளடக்கிய விவசாய பகுதி ஆகும். களக்காடு புலிகள் காப்பகத்துக்கு இதயமாக திகழக்கூடிய அமைப்பு கொண்ட இந்த ஊராட்சியில் கீழ்வடகரை, மேலவடகரை, காமராஜ் நகர், வி.கே.நகர் மற்றும் பத்மநேரி கஸ்பா ஆகிய ஊர்கள் உள்ளன.

இந்த நிலையில் களக்காடு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி பத்மநேரி ஊராட்சியை களக்காடு நகராட்சியோடு இணைக்க முயற்சிகள் நடக்கிறது. இவ்வாறு இணைக்கப்பட்டால், கிராம பகுதியில் வசிக்கும் எங்களுக்கு தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு மறுக்கப்படும்.

 இந்த வேலை வாய்ப்பை நம்பி ஏராளமான குடும்பங்கள் இருக்கிறோம்.  ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே பத்மநேரி ஊராட்சியை புதிதாக உருவாக்கப்படும் களக்காடு நகராட்சியுடன் சேர்க்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செய்தி நிருபர் நெல்லை டுடே.
https://www.nellai.today/