தென்காசி, செப். 1-தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சுத்தம் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் அரசின் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றன.

 இப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளில் 50 சதவிகிதம் பேர் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் சோப்பு கொண்டு கை கழுவ வசதிகள் செய்யப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறைகளில் பெஞ்சுக்கு இரண்டு பேர் வீதம் முககவசம் அணிந்து இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட சுத்தம் குறித்த உறுதிமொழியை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை வகித்தார். பள்ளி சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர்கள் திருமலை, மிராக்ளின் பால் சுசி, நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.

மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி வருமாறு:
நான் இன்று முதல் கீழ்காணுமாறு உறுதி எடுத்துக் கொள்கிறேன்.  நான்  எனது சுய சுத்த பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் எனது உடல் நலத்தைப் பேணுவேன்.

எனது பள்ளி, வீடு, குடியிருப்பு, பொது இடங்களாக விளையாடுமிடம், பூங்கா, தோட்டம், எனது கிராமம் மற்றும் எனது மாநிலம் ஆகியவற்றின் உள்ளும், புறமும் சுத்தமாக வைத்துக் கொள்வேன். 
மேலும் குப்பைகளை உரிய குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவேன்.என்னைச் சுற்றியுள்ள நிலம், நீர் மற்றும் காற்றினைச் சுத்தமாக வைத்திருப்பேன். சிறுநீர் மற்றும் மலம் கழிக்க கழிவறையினை பயன்படுத்துவேன் மற்றும் பயன்பாட்டிற்கு பின்னர் அதனை சுத்தமாக பராமரிப்பேன். கழிவறை பயன்பாட்டிற்குப் பின்னர் சோப்பு கொண்டு எனது கைகளை கழுவுவேன். 

மேலும் சாப்பிடும் முன்னர் சோப்பு கொண்டு எனது கைகளைக் கழுவுவேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே எப்போதும் கழிவறையினைப் பயன்படுத்துதல் மற்றும் சோப்பு கொண்டு கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிப்பேன். மகாத்மா காந்தி அவர்களின் கனவான “தூய்மை பாரதம்” என்பதற்கு இதயப் பூர்வமாக என்னை அர்ப்பணித்து எனது செயல்பாடுகள் மூலம் அதனை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைள் குறித்து பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை விளக்கினார். மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உட்பட அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நடந்து கொண்டனர். இறுதியில் உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் நன்றி கூறினார்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/