தென்காசி, செப். 13-
தமிழகத்தில் வாரத்திற்கு ஒரு முறை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நேற்று (12-09-2021) நடைபெற்றது. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம, நகர மற்றும் நகராட்சி பகுதிகளில்; கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் வகையில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்கள், பள்ளி மற்றும் சமுதாய நலக்கூடம் என மொத்தம் 614 மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட வேண்டிய நபர்கள் உட்பட 70,000 நபர்கள்; கலந்து கொண்டு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி ஆர்.சி..உயர்நிலைப்பள்ளி மற்றும் புளியரை சோதனை சாவடிகள் ஆகிய இடங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாம்களை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை மாவட்ட ஆட்சித்தலைவரின்; தீவிர முயற்சியின் காரணமாக 614 இடங்களில் இந்த முகாம்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இம்மாவட்டத்திற்கான இலக்கு 40,731 தடுப்பூசிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர்; வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு முழுவதிலும் இன்று ஒரே நாளில் 40 ஆயிரம் முகாம்களின் மூலம் 20 இலட்சம் தடுப்பூசி என்கின்ற மகத்தான இலக்கை நோக்கி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை 40 ஆயிரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற தொடங்கி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், தென்காசி மாவட்டத்தில் கூடுதலாக துறைகளிடத்தில் நேற்று மாலை வரை பெற்று வைத்திருக்கின்ற தடுப்பூசி 44,130 இதில் இதுவரை 25,000 மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இம்முகாம்கள் நாம் நிர்ணயித்த இலக்கை காட்டிலும் கூடுதலான வகையில் மக்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.இன்று காலை 12 மணி வரையில் 90 ஆயிரம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு அறைகள் மற்றும் ஒன்றியங்களில் எவ்வளவு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தினை ஒவ்வொரு மணி நோரத்திற்கொருமுறை அனுப்பி கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் எவ்வாறு ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறை விவரத்தை அறிவிப்பார்களோ அதேபோல் தடுப்பூசி ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றியங்களிலும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் எவ்வளவு மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தினை தொடர்ந்து தலைமையகத்திற்கு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தென்காசி மாவட்டத்தின் இலக்கு 40,221 என்றாலும், இதுவரை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பெற்றுள்ள விழிப்புணர்ச்சியை நாம் அறிந்து மக்களுக்கு நன்றியினை சொல்ல வேண்டும். அதே போல் இத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சுகாதாரத்துறை அலுவலர்கள் இந்த துறைக்கு உறுதுணையாக மற்ற துறையில் சேவை செய்யும் அதிகாரிகளும் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகின்றன.
ஒரு சில இடங்களில் தன்னார்வலர்கள் பரிசு திட்டத்தை அறிவித்து 1000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் பரிசு என்று சொல்லி தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களையும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வழங்கும் மகிழ்வான நிகழ்வும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
எனவே இத் தடுப்பூசி திட்டம் மிகப்பெரிய அளவில் மக்களிடத்தில் போய் சேர்ந்திருக்கிறது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனை தொடர்நது முதலமைச்சரின் ஆலோசனையின் படி வாரத்திற்கு ஒருமுறை இதுபோல் முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அந்த வகையில் ஒன்றிய அரசிடம் கூடுதலாக தடுப்பூசிகளையும் கேட்டுப்பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.
தமிழகத்தை பொறுத்த வரையில் 9 மாவட்டங்களில் கேரளாவிற்கும் தமிழகத்திற்குமான எல்லை பகுதி என கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, கோயம்புத்தூர் போன்ற பல்வேறு எல்லை பகுதிகள் கண்டறியப்பட்டு அதன் எல்லைப்பகுதிகளில் கேரள பகுதியில் இருந்து வரும் மக்களை கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று எண்ணிக்கை அதிகமாகி விட கூடாது என்பதற்காக இம் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரம் முகாம்களில் ஏறத்தாழ இந்த 9 மாவட்டங்களில் மட்டும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் 100 சதவிதம் தடுப்பூசி என்ற இலக்கோடு இத்துறை பயணித்து கொண்டிருக்கிறது. எல்லையோர மாவட்டங்களில் 100 சதவிதம் தடுப்பூசி செலுத்திவிட்டால் நோய்த்தொற்று குறைந்து விடும், மக்களை பாதுகாப்பது எளிது என்கின்ற வகையில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் தமிழக முதலமைச்சர்; அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இத்தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே அனுமதி அல்லது இரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பிற மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் கேரள தமிழக எல்லையான இப்புளியரை பகுதியில் அரசு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு ஒவ்வொரு வாகனங்களையும் அனுமதிப்பதை காண்கின்றோம். இவ்வாறு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர்; உறுதியளித்துள்ளார்.
புளியரை பகுதியில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படும், மேலும், பிற மாவட்ட மருத்துவ கழிவுகளை கொட்டப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் இணைந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழக முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க அனைத்து மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் கொட்டப்படும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இத்தடுப்பூசி முகாமில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வ விநாயம், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார், தென்காசி (தெற்கு) மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி (வடக்கு) மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை, இணை இயக்குநர் (பொ) மரு.கிருஷ்ணன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/