தென்காசி, சூலை 26:


நெல்லையில் போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக் கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

ஆண்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திலும், பெண்களுக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்திலும் வைத்து நடைபெறுகிறது.

இந்த உடற்தகுதி தேர்வில் ஆண்கள் 3 ஆயிரத்து 437 பேரும், பெண்கள் 2 ஆயிரத்து 623 பேரும் கலந்து கொள்கின்றனர். இந்த தேர்வில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு ஒரு நாளைக்கு 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆண்களுக்கு உயரம், மார்பளவு, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளன. பெண்களுக்கு உயரம், மார்பளவு, 400 மீட்டர் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் உடற்தகுதி தேர்வு நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தையும், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநபு மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஆயுதப்படை மைதானத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினர்.

ஆண்களுக்கு வருகிற 3-ந் தேதி வரையும், பெண்களுக்கு 5-ந் தேதி வரையும் உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today