தென்காசி, அக். 7:
தென்காசி மாவட்டத்தில் வரும் 9ம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021-ஐ முன்னிட்டு 09.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களை மூன்றாவது சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கும் பணி மாவட்ட தேர்தல் பார்வையாளர்; முனைவர் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் முன்னிலை வகித்தார்.
தென்காசி மாவட்டம், ஊரக ஊள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள பணியாளர்களுக்கான சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு தேசிய தகவலியல் மையத்தின் ஆன்லைன் மென்பொருள் உதவியுடன் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 60 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 98 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 655 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், ஆக மொத்தம் 819 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 2742 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
இதில் இரண்டாம் கட்ட வாக்குப்திவு தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், குருவிகுளம், செங்கோட்டை ஆகிய 5 ஒன்றியங்களுக்கு 09.10.2021 அன்று 574 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு மையங்களில் 4630 வாக்குப்பதிவு பணியாளர்கள் பணிபுரியவுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள பணியாளர்கள் எந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான கணினி முறையிலான பணி ஒதுக்கீடு நடைபெற்றது. பணிஒதுக்கீடு செய்யப்பட்ட பணி ஆணைகள் நாள (08.10.2021) நடைபெறும் மூன்றாம் கட்ட பயிற்சியின் போது வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கந்தசாமி, குணசேகரன், உமாசங்கர், ராஜமனோகரன், ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/