தென்காசி, டிச.20:

குற்றாலம் அருவிகளில் இன்று முதல் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், அய்யப்ப பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டுதோறும்  ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும், குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

இந்த இதமான சூழலை அனுபவிக்க நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சாரை சாரையாக வருகை தந்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்வார்கள் மேலும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்குக்காக குற்றாலம் ஐந்தருவி சாலையில் சுற்றுலாத் துறை சார்பில் படகு குழாம் மற்றும் ஜந்தருவி பழத்தோட்டம் பகுதியில்  சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில் இருந்து வந்தது.


இந்நிலையில் கொரோனவைரஸ் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இடையில் சில நாட்கள் குளிக்க அனுமதி வழங்கிய நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க  தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டுமென தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், குற்றாலம் வியாபாரிகள், லாட்ஜ் உரிமையாளர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றாலம் அருவி பகுதியை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் 20.12.2021 முதல் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட அருவிப் பகுதிகள் அனைத்தும்  பலத்த சேதம் அடைந்திருந்தது. அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. 

இந்நிலையில் இன்று முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட உள்ளார்கள். அதன்படி நாளை குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் சமூக இடைவெளியுடன் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே குளிக்க அனுமதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

இதனை கண்காணிக்கவும் நடைமுறைப்படுத்தவும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளுக்கு தனித்தனியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி கிடைத்திருப்பதால் குற்றாலம் பகுதி மக்கள் வியாபாரிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today