தென்காசி, நவ. 8:

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு வரும் 10ம் தேதிக்குள் அனுமதி வழங்கப்படும் என சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதால் சிஐடியு சார்பில் 9ம் தேதி நடைபெற இருந்த குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி வட்டம் குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை நீடித்து வருகிறது. இதனால் குற்றாலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் குற்றால அருவிகளை பொதுமக்கள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி வரும் 9ம் தேதி குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் நடைபெறும் என சிஐடியு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இதுகுறித்த சமாதானக் கூட்டம் தென்காசி கோட்டாட்சித் தலைவர் அலுவலகத்தில் கோட்டாட்சித் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமாறன், குற்றாலம் காவல்துறை ஆய்வாளர், தென்காசி வட்டாட்சியர் தென்காசி வருவாய் ஆய்வாளர், குற்றாலம் கிராம நிர்வாக அலுவலர், குற்றாலம் கிராம நிர்வாக உதவியாளர்,  சிஐடியு சங்க மாவட்ட  தலைவர் எஸ் அயூப் கான் சிஐடியு மாவட்ட செயலாளர் எம். வேல்முருகன், மாவட்ட பொருளாளர் தர்மராஜ், மாவட்ட துணைத்தலைவர்    வன்னியபெருமாள், மாவட்ட இணைச்செயலாளர் என்.லெனின்குமார், தென்காசி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வட்டார செயலாளர் கே. மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பற்கு அனுமதிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் வரும் 10ம் தேதிக்குள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அருவிகளை திறப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை போராட்டங்களை ஒத்தி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.  https://www.tenkasi.nic.in,

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today