தென்காசி, சூலை 5-
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இதேபோல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றுநோய் குறைந்து வருவதையொட்டி பஸ் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கியது. இதைதொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் கோவில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக கோவில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவில், சந்திப்பு கைலாசநாதர் கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லையப்பர் கோவிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து செல்லவேண்டும் என்பதற்காக பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், இலஞ்சி குமாரர் கோவில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில், சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆகியவற்றிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
நிருபர் நெல்லை டுடே