நெல்லை, ஆக.19:

பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் காய்கறிகள் விற்பனை மீண்டும் தொடங்கியது.
நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடைகள், மளிகை பொருட்கள், பூஜை பொருட்கள், பழங்கள், ஜவுளி, கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என 540 கடைகள் செயல்பட்டு வந்தன.
இவைகளில் காய்கறி கடைகள் மட்டுமே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பழைய போலீஸ் குடியிருப்பு மைதானத்தில் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடியில் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து விட்டு புதிதாக வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த கடைகளை காலி செய்யும்படி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு பழைய போலீஸ் குடியிருப்பு அல்லது ஜவகர் மைதானம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மாற்று இடம் வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து இங்கேயே கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தினார்கள்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கிர் பாஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேசினார்.

இதையடுத்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். தொடர்ந்து  பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் போலீஸ் குடியிருப்பு மைதானத்தில் உள்ள அனைத்து கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை வழக்கம் போல் நடந்தது.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today