தென்காசி, நவ. 11:

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறுபான்மையினர் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்தரமாகவும் உள்ளனர் என தென்காசியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய  தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய  தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர்  ஆணைய உறுப்பினர் செயலர் துரை ரவிச்சந்திரன, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய  தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ்; தெரிவித்ததாவது:
சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சினைகளை தமிழக முதலமைச்சரிடம்; அளிக்கும் வகையில் சிறுபான்மையின பிரதிநிதிகளாகிய நாங்கள் நல்லெண்ண தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளோம்.

கடந்த 6 வருட காலமாக சிறுபான்மையினர் பலவிதமான நெருக்கடிகளை சந்தித்து வந்துள்ளார்கள். குறிப்பாக இஸ்லாமியர்கள் மசூதிகளில் தொழவும், ஆலயங்களில் நிம்மதியாக வழிபடவும் அச்சுறுத்துதல் மற்றும் மிரட்டல் இன்றி தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்ற நம்பிக்கை வெளிச்சமாக சிறுபான்மையினர் நல ஆணையம் செயல்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறுபான்மையினர்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் சூழல் நிலவுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர்; சிறுபான்மையினரின் நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மையினர் நல அலுவலர் என்ற பணியிடத்தை உருவாக்கி அதற்காக ஆண்டுக்கு ரூ.2 .5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

சிறுபான்மையினருக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பற்றிய கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களைப் பொறுத்த வரையில் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி சிறுபான்மையினர் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிறுபான்மையினர் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய தீர்வுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் உரிய வகையில் சென்றடைய தொடர்நது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இக்கலந்தாய்வின் போது மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர்; சிறுபான்மையின மக்கள் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்து மனுக்களைப்பெற்றுக்கொண்டு அவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் 5 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 709 மதிப்பில் இலவச தேய்ப்பு பெட்டிகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 325 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும், திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 80 பயனாளிகளுக்கு தாட்கோ கடன் திட்டத்தின் கீழ் மளிகை வியாபாரம், காய்கனி வியாபாரம் , சிறு தொழில், தையல் மற்றும் ஜவுளி தொழில், பேன்சி ஸ்டோர், காலணியகம் உள்ளிட்ட தொழில்களை செய்யும் வகையில் தனிநபர் கடன்கள் ரூ.51 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலும் ஆகமொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ.51இலட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சு.தமிழ்ச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பா.குணசேகர், கோட்டாட்சியர் ராமசந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவு) ராஜேந்திரன் உட்பட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today