பாளையங்கோட்டை, சூலை 3-

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். 

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மின்வாரிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில்  நடைபெற்றது. 

கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-

தமிழகத்தில் மின்சார துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற தவறுகளை சரிசெய்வதுடன், அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை விரைவாக முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார். 

மின்வாரிய நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்ட இழப்புகள் ஆய்வு செய்யப்படும். மின்வாரியத்தில் ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வட்டி மட்டும் கட்ட வேண்டி உள்ளது. அதன்பிறகு தான் சம்பளம் மற்றும் புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. 

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித மின்திட்டமும் செயல்படுத்தவில்லை. ஒரு யூனிட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக ஒரே திட்டத்தை அறிவிப்பு மட்டுமே செய்து உள்ளனர். ஏற்கனவே 2006-11-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய 3 திட்டங்களில் மட்டுமே மின்உற்பத்தி செய்து உள்ளனர்.

தனியார் நிறுவனங்களிடம் கூடுதல் தொகை கொடுத்து மின்சாரம் வாங்கி உள்ளனர். இந்த பிரச்சினைகளில் இருந்து மின்துறையை மேம்படுத்த வேண்டும், காப்பாற்ற வேண்டும். தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க சீரிய முறையில் பணியாற்ற வேண்டும்.

கடந்த அ.தி.மு.க. அரசு மின்மிகை மாநிலம் என்று ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தனர். அப்படியானால் 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் மின் இணைப்பு வேண்டி காத்திருக்க என்ன காரணம்? கடந்த 2006-11-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி 2 லட்சத்து 4 ஆயிரம் புதிய இணைப்புகள் கொடுத்துள்ளார். 

ஆனால் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தி.மு.க. ஆட்சியில் 1,357 தொழிற்சாலைகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 1,537 இணைப்புகள் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மின்துறையில் குறைகளை சரிசெய்ய மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். இந்த சேவை மையத்தில் நேற்று வரை 51 ஆயிரம் குறைகள் தெரிவிக்கப்பட்டது. இதில் 45 ஆயிரம் குறைகளை சரிசெய்து உள்ளோம். ஆண்டுதோறும் மின் ஆளுமை விருது வழங்கப்படும். மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல நுகர்வோரிடம் பணம் எதுவும் பெறக்கூடாது.

தொழில் தொடங்க விண்ணப்பித்த அடுத்த நாள் மின் இணைப்பு கொடுத்தால் மட்டுமே உண்மையான மின்மிகை மாநிலம் ஆகும். கடந்த ஆட்சியில் கூறியதுபோல் மாயத்தோற்றம் இல்லாமல் தமிழகத்தை உண்மையான மின்மிகை மாநிலமாக மாற்றிக்காட்டுவோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், எம்.பி.க்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார், விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ராஜா, சண்முகையா, மார்க்கண்டேயன், பழனி நாடார், ராஜேஷ்குமார், சதன் திருமலைக்குமார், மின்வாரிய நெல்லை மண்டல தலைமை பொறியாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே