நெல்லை, ஆக.17:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் கடைகளை அடைத்து வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டை இடித்து விட்டு புதிதாக கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக அங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. தொடர்ந்து காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மைதானத்திலும், போலீஸ் குடியிருப்பு மைதானத்திலும் வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, மார்க்கெட் அருகில் உள்ள மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கு இந்து அமைப்பினர் மற்றும் வேன் டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீஸ் குடியிருப்பு மைதானத்தில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதால், அங்கும் தற்காலிக கடைகள் அமைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து புறநகர் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்து தருவதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று  காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து, மார்க்கெட் வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க பொதுச்செயலாளர் பெரிய பெருமாள் தலைமை தாங்கினார். சங்க தலைவர் சாலமோன், பொருளாளர் இசக்கி, துணை பொதுச்செயலாளர் மோகன் ராஜ், நிர்வாகி மாணிக்கம் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், எங்களுக்கு காந்தி மார்க்கெட்டின் அருகிலேயே தற்காலிக கடைகள் அமைத்து தர வேண்டும். இல்லையெனில் மார்க்கெட்டில் கடைகளை இடிக்காமல், அங்கேயே தொடர்ந்து கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரனிடமும் வியாபாரிகள் சந்தித்து வலியுறுத்தினர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today