நெல்லை,  ஆக.5-நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணு கூறினார்.


 கடந்த 1-ந் தேதி முதல் நெல்லை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக   பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பின்னர் அவரது தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 


தொடர்ந்து கொரோனா குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு பேசியதாவது:-


கொரோனா விழிப்புணர்வு முகாம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த முகாம்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் அமுக்கரா சூரணம் மாத்திரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பில் உள்ளது. கூடங்குளம் அரசு மருத்துவமனையில்  ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடிய விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 


நமது மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின்போது 9 இடங்களில் சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. தற்போது தேவைப்பட்டால் கொரோனா சிகிச்சை தொடங்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதைத்தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


கொரோனா 3-வது அலை வந்தால் கூட அதையும் சமாளிக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் தேவையான அளவு அனைத்து மருந்துகளும், படுக்கை வசதிகளும் மற்றும் ஆக்சிஜனும் இருப்பு வைத்து தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் வெங்கட்ராமன், துணை இயக்குனர் வரதராஜன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today