நெல்லை, நவ.27:

பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் தற்போது 100 அடியை தாண்டியது.

அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு நிருபரிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் சராசரியாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி 80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டை பகுதியில் 107 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம். மேலும் ஆற்றில் இருந்து செல்பி எடுக்கவும், ஆற்றின் குறுக்கே செல்லவும் வேண்டாம். நெல்லை மாவட்டத்தை பொருத்தவரையில் 4 முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 120 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் களக்காடு மற்றும் நாங்குநேரி பகுதியில் அதிக கனமழை காரணமாக 12 குளங்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதை அதிகாரிகள் சரி செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தாலுகா பகுதிகளிலும் பொக்லைன் மற்றும் மணல் மூட்டைகள் தயாராக உள்ளது. தாழ்வான பகுதிகளில் எந்த இடத்தில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் அதை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. அவசர உதவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்ற 1077, 04622501012, 2501070 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மாவட்டத்தில் மழை நீர் தேங்கி உள்ள குறித்த விபரங்களை பொது மக்களே நேரடையாக இணையதளத்தில் பதிவு செய்யும் முறை மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எனவே தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் தங்கள் வசிப்பிடங்களில் மழை நீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருந்தால், https://nellaineervalam.in/waterlogging/ என்ற இணைய தளம் வழியாக பொது மக்களே நேரடையாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம். 

பதிவு செய்யப்படும் விபரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். நெல்லை மேலப்பாளையத்தையும் டவுனையும் இணைக்கும் மேலநத்தம் பாலத்தை தொடும் விதமாக தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அந்த பகுதியில் பொதுமக்கள் கூடி வெள்ளத்தை பார்வையிட வந்தனர். இதையொட்டி அங்கு போலீசார் பாலத்தின் மீது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்தை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நெல்லை டவுன் நயினார்குளம் மறுகால் தண்ணீர் வாய்க்கால் மூலம் வருவதால் நெல்லை சந்திப்பு பகுதி குளம் போல் மாறியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். https://www.tirunelveli.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today