தென்காசி, ஆக. 20:

தென்காசி மாவட்டம், குருவிகுளம்  ஒன்றியம் இளையரசனேந்தலை தலைமையிடமாகக் கொண்டு தனி ஒன்றியம் அறிவிக்க வேண்டும். என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் வைகோ எம்பி கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் , குருவிகுளம் ஒன்றியப் பகுதிக்கு உட்பட்ட இளையரசனேந்தல் வருவாய் குறுவட்டப் பகுதிகள் வருவாய் துறையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் , ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் குருவிகுளம் ஒன்றியத்திலும் உள்ளது .

இந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் , இளையரசனேந்தலைத் தலைமை இடமாகக் கொண்டு தனி ஒன்றியம் அறிவிக்க வேண்டும் எனவும் , அவ்வாறு அறிவிக்கும் வாய்ப்பு இல்லாதபட்சத்தில் தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்திட வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர் . 

வருவாய் , சுகாதாரம் , கல்வி உள்ளிட்ட பல துறைகள் தூத்துக்குடி வருவாய் மாவட்டப் பகுதியிலும் , ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மட்டும் குருவிகுளம் ஒன்றிய எல்லைப் பகுதியிலும் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் ஏற்படுவதை பல்வேறு கிராம மக்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தனர் . இவர்களின் கோரிக்கை நியாயமானதாகும் . 
எனவே , பொதுமக்களின் நலன் மற்றும் விருப்பத்தை கவனத்தில் கொண்டு குருவிகுளம் ஒன்றியத்தில் தற்போது வரை இருந்து வரும் 12 ஊராட்சிப் பகுதிகளையும் இளையரசனேந்தல் தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவித்து தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் இணைந்திட வேண்டும் எனவும் , அதற்கு உடனடி சாத்தியக் கூறுகள் இல்லாத பட்சத்தில் கீழ்கண்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஒன்றியத்தில்  இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். 

அதன்படி 1. அய்யனேரி ஊராட்சி 2. சித்திரம்பட்டி ஊராட்சி 3. அப்பனேரி ஊராட்சி 4. வெங்கடாசலபுரம் ஊராட்சி 5. புளியங்குளம் ஊராட்சி 6. இளையரசனேந்தல் ஊராட்சி 7. ஜமீன்தேவர்குளம் ஊராட்சி 8. பிள்ளையார்நத்தம் ஊராட்சி 9. பிச்சைத்தலைவன்பட்டி ஊராட்சி10. வடக்குப்பட்டி ஊராட்சி 11. நக்கலமுத்தன்பட்டி ஊராட்சி 12. முக்கூட்டுமலை ஊராட்சி உள்ளிட்ட  12 ஊராட்சிகளை தூத்துக்குடி வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைத்திட , தக்க உத்தரவுகள் பிறப்பிக்குமாறும்  கேட்டுக்கொள்கிறேன் . 
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி யின் மகன் துரை வைகோ, தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம்தி.மு.இராசேந்திரன் ஆகியோர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் வழங்கினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி எழுதிய கடிதத்தை தமிழக ஊரகவளர்த்துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம்  துரை வைகோ மற்றும் தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.இராசேந்திரன் வழங்கிய போது எடுத்த படம்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today