தென்காசி, ஆக. 7:

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம்
கைவினைக் கலைஞர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான மூலப் பொருள்களை வாங்க மூலதன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த வட்டியில் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். 

இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களின் ஆண்டு வருமானம் அதிகபட்சமாக கிராமப்புறத்தில் ரூ.98,000/- நகர்புறத்தில் ரூ.1,20,000/- வரை இருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் தனி நபருக்கு அதிகபட்சமாக ரூ.10,00,000/- (பத்து இலட்சம்) வரை கடன் தொகை வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5% வட்டிவிகிதத்திலும், பெண் பயனாளிகளுக்கு 4% வட்டி விகிதத்திலும் கடனுதவி வழங்கப்படும். மேற்கண்ட  திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் கடன்விண்ணப்பத்தினை https://tenkasi.nic.in/forms  என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், தென்காசி – 627 811, நேரிலோ/ அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ்; செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்;.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today