தென்காசி, சூலை 28:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகை வியாபாரிகள் சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய சட்டமான எச்.யூ.ஐ.டி. சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் ஒரு நாள் கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நேற்று நடந்தது. 

இதையொட்டி சங்கரன்கோவிலில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து நகர பொற்கொல்லர் சங்கத்தினரும் 200-க்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து நகை வியாபாரிகள் சங்க செயலாளர் பி.மாரிமுத்து கூறியதாவது:-

கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் பி.ஐ.எஸ். ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்து வருகிறோம். மக்களுக்கு தரமான தங்கம் சென்றடைவதில் நாங்களும் ஆர்வமாக உள்ளோம். எனவே பி.ஐ.எஸ். ஹால்மார்க் சட்டத்தை வரவேற்கிறோம். அதே சமயம் புதிய எச்.யூ.ஐ.டி. சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

இதன்மூலம் சிறு நகை வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும். குறிப்பாக நகைகளுக்கு எச்.யூ.ஐ.டி. எண்ணை பதிவு செய்ய ஹால்மார்க் மையத்துக்கு இ-மெயில் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்கள் நகைகளை கொண்டு வரச்சொல்லி மெயில் அனுப்ப வேண்டும். அதன்பிறகு நகைகளை அவர்களுக்கு அனுப்பி 2 அல்லது 3 நாட்கள் கழித்து பதிவு செய்து தருவார்கள். 

இதனால் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஒரு வாரம் ஆகும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக நகைகளை விற்பதில் சிரமம் உள்ளது. மேலும் ஹால்மார்க் மையம் இங்கு கிடையாது. எனவே மத்திய அரசு இந்த புதிய சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today