தென்காசி, ஆக.1-

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இ-பாஸ், தொற்று இல்லா சான்று உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 

கேரளாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. 

கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால், தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரையில் இயங்கி வரும் சுகாதாரத்துறை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. அங்கு கேரளாவில் இருந்து வருபவர்களிடம் இ-பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா நேற்று திடீரென அந்த சோதனைச்சாவடிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள ஊழியர்களிடம், எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும், அவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் சோதனைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் டாக்டர் அருணா நிருபர்களிடம் கூறியதாவது:

புளியரை சோதனைச்சாவடியில் வழக்கம்போல் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சோதனைகள் நடத்தப்படுகிறது. சுகாதார ஆய்வாளர் ஒருவர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளாக இரவும் பகலும் பணியாற்றி வருகிறார்கள். 

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் கொரோனா இல்லை என்ற சான்று இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் மாதிரி எடுக்கப்பட்டு கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் இ-பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்று சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். 

மேலும் கேரளாவில் இருந்து ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு வருபவர்களை சோதனை செய்ய செங்கோட்டை, தென்காசி ரெயில் நிலையங்களில் சுகாதார குழுவினர் முகாமிட்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கும் சிறப்பு பரிசோதனை நடைபெறுகிறது.

சோதனைச்சாவடியில் யாருக்காவது காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அங்கேயே அவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு அவர்கள் எங்கே செல்கிறார்கள்? என்று கேட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

தமிழகத்துக்கு வருபவர்களின் முகவரி, செல்போன் எண் போன்றவற்றை பதிவு செய்து அந்த பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today